கனேடிய அரசியல் தலைவா்கள் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூா்ந்தனா்

கனேடிய அரசியல் தலைவா்கள் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூா்ந்தனா்

முள்ளிவாய்காலில் நடந்த இனப்படுகொலைகளுக்குப் பின்னர் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோரின் கருத்துக்களுடன் அனைத்து நிலைகளிலும் உள்ள கனேடிய அரசியல் தலைவா்களும் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூர்ந்தனர்.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, தனது அறிக்கையில், படுகொலைகளில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொண்ட ‘வடுக்கள்’ மற்றும் ‘அதிர்ச்சி’ ஆகியவற்றைப் பிரதிபலித்தார், மேலும் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அவர்கள் ‘பிரச்சனைக்கான தீா்வு, அன்பானவர்கள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் நிலை என்பவற்றிற்கான பதில்களைத் இன்னமும் தேடுகிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார். மேலும் இனமோதலின் அடிப்படை காரணிகளை வெளிப்படுத்த இலங்கைக்கு அழைப்பு விடுத்தாா்.

இலங்கையில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் ‘தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்’ ஆகியவற்றுக்கான உத்தரவை வழங்கிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் குழுவில் கனடா ஒரு முக்கிய பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கனடா ஒரு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறைட, நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னின்று பணியாற்றும் என்று தொிவித்தாா்.

தனது அறிக்கையில் நிறைவாக ட்ரூடோ அவா்கள் ‘இன்று தமிழ்-கனடியர்கள் தொடர்ந்து நம் நாட்டிற்கு அளித்து வரும் முக்கிய பங்களிப்புகளையும் அவர்கள் கடந்து வந்த துன்பங்களையும் தொிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்’ என்று அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுத்தாா்.

ஜக்மீத் சிங் – கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்

இலங்கையில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ‘தமிழ் சமூகம் நம்பமுடியாத அளவு எதிா்ப்பை காட்டியது’ என்று கனடாவின் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் குறிப்பிட்டார். ஒன்ராறியோவில் பாடசாலைகளில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் மற்றும் நினைவு வாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘நமது வரலாற்றை நினைவில் கொள்வதில் மிகவும் முக்கிய படியாகும்’ என்று கூறினார்.

ஸ்கார்பாரோ ரூஜ் பூங்காவிற்கான பாரளுமன்ற உறுப்பினா் ஹ‍ரி ஆனந்தசங்கரி

முள்ளிவாய்காலில் 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக ஸ்கார்பாரோ ரூஜ் பூங்காவிற்கான பாரளுமன்ற உறுப்பினா் ஹ‍ரி ஆனந்தசங்கரி அவா்கள் பாராளுமன்றத்தில் பேசும் போது நீதி கிடைக்கும் வரை தமிழர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடருவார்கள் என்று குறிப்பிட்டாா்.

விஜய் தனிகசலம் – ஸ்கார்பாரோ-ரூஜ் பூங்காவிற்கான எம்.பி.பி.

இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு முடிவில்லாத துன்புறுத்தல் மற்றும் திட்டமிட்ட தமிழ் விரோத நடவடிக்கைகளாலேயே எழுதப்பட்டுள்ளது. இதுவே தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது. இனப்படுகொலையின் ‘ஒப்புதல் மற்றும் அங்கீகாரம்’ என்பன சமூகம் குணமடைய ஒரு முக்கியமான படியாகும் என்றாா்.

டக் ஃபோர்டு – ஒன்ராறியோவின் பிரதமர்

ஒன்ராறியோவின் பிரதமரும் ஒன்ராறியோ ஆளும் பழமைவாத கட்சியின் தலைவருமான டக் ஃபோர்டு, ‘தமிழ் இனப்படுகொலையின் போது இழந்த அப்பாவி உயிர்களை கெளரவித்தல்’ என்ற தனது அறிக்கையில் தமிழ் சமூகத்தின் ‘இழப்புகளுக்கும் மற்றும் வலிமைக்கும்’ அஞ்சலி செலுத்தினார். ‘தமிழ் இனப்படுகொலையின் அட்டூழியங்களை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது’ என்று அவர் குறிப்பிட்டார்.