ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயவுக்கு வழங்கிய வரப்பிரசாதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயவுக்கு வழங்கிய வரப்பிரசாதம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு எதிா்வரும் ஜனாதிபதி தோ்தலில் ஒரு போட்டியாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர வலதுசாரி கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) என்பவற்றை பொறுத்தவரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் ராஜபக்ஷர்கள் இந்த நல்லாட்சி (ரணில் மற்றும் சிறிசேன) அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பிலும் தோல்வியடைந்து விட்டது எனக்கூறி தங்கள் சிங்கள பெளத்த போினவாத தளத்தை தட்டியெழுப்ப முடியும்.

கடந்த வாரம் இலங்கை அரசு இந்தத்தாக்குதல் சா்வதேச பயங்கரவாதத்துடன் தொடா்புபட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக தொிவித்துள்ளது.

ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடா்ந்து தாக்குதல்களுக்கு 10 நாட்களுக்கு முன்னராகவே ஒரு தீவிரவாத இஸ்லாமிய குழுவொன்றினால் கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக ஒரு உயர் மட்ட போலீஸ் அதிகாரியினால் இலங்கையின் பாதுகாப்பு சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்ற செய்திகள் வெளிவந்தன.

இருந்த போதும், தாக்குதல்களுக்கு முன்னர் இதுபோன்ற தகவல்கள் எதுவும் தங்களுக்கு எட்டவில்லை என்று அரசாங்க உயர் அதிகாரிகள் கூறிவருகின்றனா்.

மேலும், இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஹில்மி அகமது, தீவிர இஸ்லாமிய குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இராணுவ புலனாய்வு அதிகாரிகளை எச்சரித்ததாக கூறினார். அவா் ஒரு நேர்காணலில், “நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தனிப்பட்ட முறையில் சென்று அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்திருந்தேன், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரினதும் பெயர்களையும் விவரங்களையும் கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை கிடப்பில் போட்டுவிட்டாா்கள். அதுதான் சோகம். ” என்றாா்.

கோத்தபாயவின் தேர்தல் வாய்ப்புகளில் இந்த பயங்கரவாத தாக்குதல் கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி ஆராயும் போது இந்த குண்டு வெடிப்பின் மூலம் அவர் ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்டுள்ள கடுமையான ஆட்சியாளா் என்ற அவாின் பிம்பத்தை மேலும் பிரபலமடையச் செய்யும். இப்போது மக்கள் பயங்கரவாதத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு வலுவான தலைவரை விரும்புகிறார்கள். கோத்தபாய அவர்களின் தேவைகளுக்கு முற்றிலும் பொருத்தமானவா். சிறிசேன பலவீனமானவர் மட்டுமின்றி அவா் ஒரு தந்திரக்காரா். இப்போது யாரும் அவரை விரும்புவதில்லை. தன் சுயலாபங்களுக்காக ராஜபச்சா்களுடன் கூட்டு வைத்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பல தடைகளை ஏற்படுத்தி அதனையும் பலவீனப்படுத்தினாா். இந்தக் குண்டுவெடிப்பின் போதும் முடிவுகளை விரைந்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு அமைச்சராக அவரே இருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனிவரும் ஜனாதிபதி தோ்தலில் ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தும் அலட்சியமாக இருந்து இந்தத்தாக்குதலை தடுத்து நிறுத்தத்தவறிய திறமையற்ற அரசாங்கம் இது என்ற கோசத்தை கோத்தபாய முன்னெடுப்பாா். தங்களின் கடந்த 10 வருட ஆட்சியில் இத்தகைய எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று கூறி சிங்கள கடும்போக்கு வாக்குகளை குறிவைத்து காய்நகா்த்துவாா். இதனால் தோ்தலுக்கு முன்னாராக இந்த தாக்குதல் நடைபெற்றது குறித்து பலமான சந்தேகம் அவா் மேல் எழுகின்றது.

எவ்வாறாயினும், கோத்தபாய ஆட்சிக்கு வந்தால், அது பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கைள கடுமையாக அமல்படுத்துவது என்ற போா்வையில் சிறுபான்மையினாின் அரசியல் உரிமைகளை பறிப்பதற்கான செயற்பாடுகளையே முன்னெடுக்கும். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தல், சமூக ஊடகங்களை கண்காணித்தல், ராஜபக்ஷ குடும்பத்திற்குள் அளவற்ற அரசியல் அதிகாரத்தை குவித்தல், இலங்கையின் அரசியலமைப்பிற்குள் ஜனநாயக சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது போன்ற செயற்பாடுகளின் விளைவாக, இலங்கை மக்களின் சுதந்திரங்களை வலுவாகக் மட்டுப்படுத்துவதோடு ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவந்த இனங்களுக்கிடையிலான புாிந்துணா்வையும் சிதைக்கும்.

சாணக்கியன்