அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்

அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்

போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை.   

வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன. அந்தப் பேரழிவைத் தமது கேலிக்கூத்துகளின் மூலம், சிலர் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வதற்கு உதவாத உலகைப் பரிசளிப்பதற்கு, இவர்கள் முண்டியடிக்கிறார்கள்.   

ஈரான் மீது போரொன்றைத் தொடுப்பது, தவிர்க்கவியலாதது போன்றதொரு மாயையை, அமெரிக்க ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் உருவாக்கி வருகிறார்கள்.   

‘உலகின் மிகப்பெரிய ஆபத்து ஈரானிடமிருந்து’ என்று ஊடகங்கள் எழுதுகின்றன. இது, ஈரான் மீது வலிந்த போரொன்றை, அமெரிக்கா தொடுப்பதற்கான முன்னெடுப்பு என்பதை விளங்குவதில் சிரமங்கள் இருக்காது. 

கடந்த வியாழக்கிழமை, ஈரானின் வான்பரப்பில் பறந்த, அமெரிக்காவின் உளவு ‘ட்ரோனை’ ஈரான் சுட்டுவீழ்த்தியதைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய தளங்கள் மீது, தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார். கடைசி நிமிடத்தில், இந்த உத்தரவை அவர் மீளப்பெற்றார்.   
பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறது  

கடந்த வியாழக்கிழமை நடந்த குழப்பங்கள், மூன்றாம் உலகப் போர் தொடங்கும் விளிம்புக்கு, உலகம் சென்று மீண்டிருப்பதை உணர்த்தின.   

வியாழக்கிழமை, அமெரிக்காவின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான RQ-4 Global Hawk உளவு ‘ட்ரொனை’ ஈரான் சுட்டுவீழ்த்தியது. தொழிநுட்ப ரீதியாக, அதிநவீனமான ‘ட்ரொனை’ சுட்டுவீழ்த்தியிருப்பது, அமெரிக்காவுக்குப் பலவகைகளில் நெருக்கடியைக் கொடுத்தது.   

முதலாவது, இவ்வாறதொரு நிகழ்வு நடக்கும் என, அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்வு, மூன்று பிரச்சினைகளை அமெரிக்காவுக்கு உருவாக்கியது.   

முதலாவது, சுட்டு வீழ்த்தப்பட்டமையானது, அமெரிக்காவுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி. எனவே, ஏதாவது செய்தாக வேண்டும். அல்லது உலக அரங்கில் அமெரிக்காவின் புகழ் மங்கும்.   

இரண்டாவது, அமெரிக்காவின் உளவு பார்க்கும் கபடம், வெளிப்பட்டுள்ளது. எனவே, தனது நடத்தைக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.   

மூன்றாவது, அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை விட, மேலானதொரு தொழில்நுட்பம் மூலமே, இந்த ட்ரொனைத் தாக்குவது சாத்தியம். எனவே, ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.   

இந்த மூன்று விடயங்களையும் கையாளுவதற்குப் போரொன்றைத் தொடுப்பதே, சிறந்த செயலாக இருக்கும் என அமெரிக்கா நினைத்தது. ஏனெனில், போர் நடந்த நிகழ்வை, இலகுவாகத் திசைமாற்றிவிடும்.   
இப்போது, அதுதான் நடந்திருக்கிறது. இப்போதைய ஊடகக் கவனம், போர் மீதே உள்ளது. ஆனால், நடந்த நிகழ்வும் அத்தோடு தொடர்புடைய விடயங்களும் கவனம் பெறாமல் போயுள்ளன.   

ஈரானின் மீது போரொன்றை தொடுப்பதற்கான காரணங்களை, அமெரிக்கா உருவாக்கி வருகிறது. ஈரான், உளவு ட்ரொனை சுட்டுவீழ்த்தியதைக் கண்டிக்கும் நாடுகள், ஈரானின் இறைமையை அமெரிக்கா மீறியிருப்பதையும் உளவுபார்த்திருப்பதையும் கண்டிக்கவில்லை.   

இவை, இன்று உலக ஒழுங்கு குறித்த யோக்கிதைகளைச் சொல்கின்றன. இதை இங்கு சொல்வதற்கு காரணம், இந்த யோக்கியவான்கள், தமிழருக்கான நீதியையும் உரிமையையும் பெற்றுத் தருவார்கள் என்று, இன்னமும் சிலர் நம்புகிறார்கள்.   

கடந்த வியாழக்கிழமை, ட்ரம்பின் ‘டுவிட்டர்’ பதிவுகள், உலகை அச்சமூட்டும் நிலைக்கு இட்டுச் சென்றன. “எத்தனை பேர் மரணமடைவார்கள்” என்று தான் கேட்டதற்கு, மூன்று இடங்களில் இருந்து தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகப் பதில் வந்தது என்று, ட்ரம்ப் பதிவிட்டதன் மூலம், பொறுப்பற்ற விதத்தில், அவர் நடக்கத் தயாராக இருந்தார் என்பது புலனாகிறது. ஆனால், இறுதியில் தனது கட்டளையை அவர் மீறப்பெற்றதன் காரணம், ஈரானின் மீதான கரிசனை அல்ல.

மாறாகத் தாக்குதல்கள், ஈரானின் பதிலடியைத் தவிர்க்க இயலாததாக்கும். ஆனால், அமெரிக்கா உண்மையில் அதுபோன்றதொரு போரை விரும்பினாலும் அதற்கு முழுமையாகத் தயாராகவில்லை என்பதை இது உணர்த்தியது.   

குறிப்பாக, ஒரு வெற்றிகரமாக முழு அளவிலான போரை நடத்துவதற்கான பொருளாதார, பூகோள அரசியல் மற்றும் அரசியற்கூட்டுக்கான சூழல்கள், வாய்ப்பாக இல்லை என்பதை அமெரிக்கா நன்கறியும்.   

ஈரான் மீதான போர், வெறுமனே ஒரு நாட்டின் மீதான போர் அல்ல என்பதை, இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஈரான் மத்திய கிழக்கின் மிக முக்கியமான அங்காடி. அமெரிக்கா தலைமையேற்றுள்ள ‘நேட்டோ’ நாடுகளின் கூட்டணிக்கு எதிரான கூட்டாணியின் முக்கிய பங்காளி ஈரான். இது, நீண்டு நெடுத்து முடிந்த சிரியப் போரில் வெளிப்பட்டது.  

 ஈரான் மீதான தாக்குதல், மத்திய கிழக்கையும் தாண்டி எதிரொலிக்கும். ஈரான் மீதான போரை, அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் விரும்பினாலும் இவர்களது கூட்டாளிகள் விரும்பவில்லை. இதனாலேயே, ஒரு போரைத் தொடங்க இயலாமல் அமெரிக்கா அவதிப்படுகிறது.   

அண்மைய அமெரிக்க நடத்தை, பல நாடுகளுக்கு அச்சத்தையும் நிச்சயமின்மையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஈரானின் எண்ணையை நம்பியிருக்கும் நாடுகள், மறுபுறம் மத்தியகிழக்கு நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் எனப் பல, இந்த நிகழ்வுகளால் தொடர்ந்து அவதியுறுகின்றன.   

ஒரு போரை அமெரிக்கா விரும்பலாம். ஆனால், அதைத் தாங்குவதற்கான வலிமை நிச்சயமாக உலக நாடுகளிடையே இல்லை என்பதைக் கடந்த வார நிகழ்வுகள் காட்டி நின்றன.   

ஆட்சி மாற்றத்துக்கான முனைப்பு  

ஈரான் மீது வலிந்த போரொன்று திணிக்கப்படுகிறது. ஈரானின் அணுசக்தி உற்பத்தி தொடர்பில், 2015ஆம் ஆண்டு உலகின் ஆறு முக்கிய நாடுகள் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.   

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவ்வுடன்படிக்கையில் இருந்து விலகி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை இட்டு, புதிய நெருக்கடியை உருவாக்கினார்.  இந்தப் பின்புலத்தில் ‘ஈரானுடன் பேசித் தீர்க்க வேண்டும்’ என்ற தோரணையில், பல நாடுகள் தொடர்ந்து கருத்துரைக்கின்றன. இதில் பேசித் தீர்க்க என்ன இருக்கிறது என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது அமெரிக்கா; பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா; போர்ப்பறையை இசைப்பது அமெரிக்கா. இப்படியிருக்க, ஈரானுடன் பேசித் தீர்க்க என்ன இருக்கிறது?   

பொருளாதாரத் தடைகள் மூலம், ஈரானில் நெருக்கடியை உருவாக்கி, அங்கொரு கிளர்ச்சியை உருவாக்கி, ஆட்சிமாற்றம் ஒன்றைச் செய்ய இன்னொருமுறை அமெரிக்கா முனைகிறது. ஈரானின் மீதான அமெரிக்க ஆதிக்கத்துக்கு, 60 வருடங்களுக்கு முன்னரே அத்திவாரம் இடப்பட்டது.   

ஈரானின் ஆட்சித் தலைவர் மொஸாடெக் படுகொலையின் பின்பு, அமெரிக்க- பிரித்தானிய முயற்சி மூலம், ஈரானில் முடியாட்சி நிறுவப்பட்டது. அதைப் போன்ற பயங்கரமான சர்வதிகாரக் கொடுங்கோன்மை, ஆசியாவில் வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு, அந்த ஆட்சி சகல எதிர்ப்பாளர்களையும் கடுங்கண்காணிப்பு, ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது.   

அந்த ஆட்சி, கொமெய்னி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியால் 1978இல் தூக்கி எறியப்படும் வரை, ஈரான் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவே இருந்தது. ஈரானியப் புரட்சி, அமெரிக்காவின் கரங்களைப் பலவீனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இன்றுவரை ஈரானில் ஓர் ஆட்சிமாற்றத்துக்க அமெரிக்கா முயன்று வந்துள்ளது.   

கடந்த இரண்டு தசாப்தங்களில், ஈரான் முக்கியமான உலக அரங்காடியாக் தன்னை மாற்றியுள்ளது. அரசியலுக்கு அப்பால், அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மிகவும் மேம்பாடான நிலைக்கு அது சென்றுள்ளது.   

மேற்குலகுக்கு எதிரான ரஷ்ய-சீனக் கூட்டணியின் மூன்றாவது நாடாகவும் தூணாகவும் ஈரான் உள்ளது. இது, மேற்குலக நலன்களுக்கு நல்லதல்ல. இன்று ஈரானைத் தனிமைப்படுத்தும் செயல்கள் பலதளங்களில் நடக்கின்றன.   

நாம், எவ்வளவு அபாயமான காலப்பகுதியில் வாழ்கின்றோம் என்பதைக் கடந்த வார நிகழ்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன. கடந்த வியாழக்கிழமை, இறுதிநேரத்தில் தவிர்க்கப்பட்ட போர், ஆறுதல் அளிப்பதாக இல்லை; அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.   

போர் ஒன்று நிகழாது என்ற உத்தரவாதத்தைத் தரவியலாத சூழலிலேயே, நாம் வாழ்கின்றோம். நான் இதை எழுதும் போது, அமெரிக்கா எதுவிதத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், நீங்கள் இதை வாசிக்கும் போது, எனது வரிகளை அபத்தமாக்கும்படி,  ஓரு போரை, அமெரிக்கா தொடங்கியிருக்கக் கூடும்.