ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலத்தை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமை பலரினதும் கவனததையும் ஈர்த்திருந்தது.
ஏனென்றால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அண்மைக்காலமாக எழுந்திருந்தது. எனினும் தான் மஹிந்த அணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அமைச்சரவை கூட்டத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார் மைத்திரி.
இதே வேளை ஐக்கிய தேசிய முன்னணி சிறந்த அரசியல் திட்டத்தை முன்வைப்பது மட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரையும் பெயரிட்டு செயற்பட்டால் தான் ஆதரவு தரத் தயாராக இருப்பதாகவும் இல்லையேல் தான் நடுநிலை வகிக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் தேசிய அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை தற்போது மக்கள் மத்தியில் இல்லை என்பது வெள்ளிடைமலை. மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் எவ்வாறு ரணில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டாரோ அதே போன்று கடந்த வருட இறுதியில் திடீரென மஹிந்தவை பிரதமராக்கி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதில் ஜனாதிபதி மைத்திரியும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ளார்.
இது எல்லாவற்றையும் விட ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவமானது இந்த அரசாங்கத்தின் பால் சிறிதளவேனும் இருந்த நம்பிக்கையை அற்றுப்போகச்செய்துள்ளது. ஏனெனில் சம்பவம் இடம்பெறப்போவது குறித்து பத்து நாட்களுக்கு முன்பே தகவல்கள் கிடைத்தும் உரிய தரப்புகளின் அலட்சியப்போக்கு இன்று பல உயிர்களைக் காவு கொள்ள வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளில் தத்தளித்து வந்த மக்களுக்கு தற்போது உயிர்பயம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மை.. ஆகவே எந்த வகையிலும் திறனில்லாத இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளமை முக்கிய விடயம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தம்
இந்நிலையில் மேற்கூறிய சம்பவங்களைப்பற்றி விமர்சித்துக்கொண்டே ஜனாதிபதித் தேர்தலுக்கு வியூகம் அமைத்து வருகின்றது மஹிந்தவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி. ஜனாதிபதி மைத்திரியின் நகர்வுகளால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொண்டிருக்கும் மஹிந்த அவரை விமர்சிக்காது ரணில் அரசாங்கத்தை நாசூக்காக விமர்சித்து மக்கள் மத்தியில் இழந்து விட்ட தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த முயற்சித்து வருகிறார்.
தமிழர்களின் வாக்குகளைப் பெறல்
முழுக்க முழுக்க சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை நம்பி தனது தம்பி கோத்தாபாயவை களமிறக்கும் இறுதி கட்ட தீர்மானங்களை மஹிந்த எடுத்து விட்டார் என்றே தெரிகிறது. மறுபக்கம் கோத்தாபய ராஜபக்ஷவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் எலிய மற்றும் வியத்கம போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாகவும் தனது தேர்தல் பிரசாரங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் சில தமிழ்த்தரப்புகளும் கோத்தாபாயவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மலையகத்தைப்பொறுத்தவரை இ.தொ.கா ஏற்கனவே தாம் மஹிந்த பக்கம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், வடக்கு, கிழக்குப்பகுதிகளில் உள்ள தமிழ் வாக்குகளை ஓரளவுக்கேனும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கோத்தாவுக்கு இல்லாமலில்லை.
இந்நிலையிலேயே வடக்கின் முன்னாள் போராளிகள் குழுவொன்று கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை தருவதற்கு முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்தர்பத்தை மஹிந்த பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் வடக்கில் கூட்டமைப்பினரை தாண்டி தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதிலும் மக்கள் மனங்களை வெல்வதிலும் அவருக்குத் தேவை உள்ளது. மேலும் இறுதி யுத்த கால சம்பவங்களின் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப்பெறுவதில் மஹிந்த இன்னும் சரியான காய்களை நகர்த்தவில்லை . இந்நிலையில் குறித்த முன்னாள் போராளிகள் ஜனநாயக வழியில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு தீர்மானித்து கடந்த காலங்களில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்களாவர். கூட்டமைப்பினரோடு இணைந்து அரசியல் செய்வதில் உள்ள சிக்கல்களை நன்கறிந்த நிலையிலும் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்ட நிலையிலுமே இவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
அனேகமாக இன்னும் சில வாரங்களில் மேற்படி முன்னாள் போராளிகள் அமைப்பு இவ்விடயத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தக்கூடும். இவர்களை முன்னிறுத்தி வடக்கில் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் பற்றி மஹிந்த தரப்பு ஆலோசனைகளை முன்வைக்கலாம். எது எப்படியானாலும் வடக்கில் பொதுஜன முன்னணி காலூன்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கூட்டமைப்பையும் அதோடு மல்லுக்கட்டி நிற்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.யின் தமிழ்ப்பேரவையையும் இதன் மூலம் ஓரங்கட்டி விட்டு தனது அரசியலை மஹிந்த வடக்கில் முன்னெடுக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கின்றது.
மலையகத்தில்
ஜனாதிபதித் தேர்தல் எப்போது இடம்பெறும் என அறிவித்தல் வந்த பிறகு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி.திகாம்பரம் புதிய ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தருவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. மலையக மக்களின் அபிவிருத்தித் தொடர்பில் எமது கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய புதிய வேட்பாளருக்கே ஆதரவை அளிக்க உள்ளதாக அவர் அன்றைய நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
மாற்றுக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ஆதரவுத் தளத்தை பகிரங்கமாகக்கொண்டிருந்தாலும் தற்போது அவர்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு தந்து வரும் பிரிவினராகவே இருக்கின்றனர். மஹிந்த தரப்பினருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று மைத்திரி அறிவித்த பிறகு இ.தொ.கா தான் யாருக்கு ஆதரவு தரப்போகிறோம் என்பதை இப்போது நிச்சயப்படுத்திக்கொண்டிருக்கும்.
எந்த சந்தர்ப்பத்திலும் அக்கட்சி ஏனைய மலையக பிரதான கட்சிகளை மஹிந்த தரப்போடு சேர்வதற்கு எச்சந்தர்ப்பத்திலும் இடங்கொடுக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். எல்லா பிரதேசங்களிலும் தமிழர் வாக்குகளைப்பெற்றுக்கொள்வதில் மஹிந்த தரப்பு தீவிர காட்டப்போவதில்லை எனத்தெரிகிறது. தற்போது பிளவு பட்டுப்போயிருக்கும் பௌத்த சிங்கள வாக்குகளைப்பெறுவதிலேயே வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வரும் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலையின் போது மஹிந்த பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என நாட்டின் பல தரப்பிலிருந்தும் குரல்கள் கிளம்பியிருந்தன. அந்த சம்பவம் மஹிந்த மீது சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியது என்னவோஉண்மை. எனினும் அதை அவர் ஈஸ்டர் தினக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் சரிபடுத்திக்கொண்டார்.
அந்த சம்பவங்களுக்குப்பிறகு தமிழ் கிறிஸ்தவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களாகவே உள்ளனர். ஆகவே அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் மஹிந்த மற்றும் கோத்தாபய சகோதரர்கள்.
மறுபக்கம் பௌத்த சிங்கள மக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் முஸ்லிம் மக்களின் ஆதரவுத்தளத்தையும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளிலும் மஹிந்த இறங்கியுள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் என்பது இன,மத பேதமின்றி அனைவரையும் பாதிப்புக்குட்படுத்தும் செயற்பாடாகும் .அப்படியான பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்கள் நாமே. எதிர்காலத்திலும் எமது நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக தடுக்கும் வல்லமை எமக்கே உள்ளது என்ற கோஷமே மஹிந்த அணியின் தேர்தல் பிரசாரமாக இருக்கப்போகின்றது.