திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்

வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள புராதன கிராமமான தென்னமரவடி கிராமத்தில் கந்தசாமி மலையின் உச்சியில் ஒரு கட்டுமானத்தை நிர்மாணிப்பதை நிறுத்தியிருந்த சிறிலங்கா தொல்பொருள் துறை, திடீரென்று அதனை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது. அவசரமாக இந்த கட்டுமான திட்டத்தை முடித்து, பிரதேச செயலகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறுகிறது. தமிழ் குடியிருப்பாளர்கள், அவர்களின் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் 400 ஆண்டுகள் பழமையான சைவ கந்தசாமி கோவிலின் அறங்காவலர் குழு ஆகியவை இந்த வாரம் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இது குறித்து புகார் அளித்துள்ளன. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் டச்சு காலம் வரை தென்ன-மரவடி ஒரு தமிழ் வன்னி மன்னரின் இடமாக இருந்தது. ஒரு பின்தங்கிய குக்கிராமமான இது திருகோணமலை நகரத்திலிருந்து 70 கி.மீ வடக்கே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் குறுகிய மூலோபாய பகுதியில் அமைந்துள்ளது.

தென்னை-மரவடி கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட தமிழர்களின் மூன்று சமுக ஆர்வலர்களால் ஒப்பமிட்ட கடிதம்

இந்த பணியில் ஈடுபடுபவர் இது இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் கட்டிடம் என கூறியிருந்தாலும், அது அந்தத் துறையால் உத்தியோகபூர்வ உரிமை கோரப்படவில்லை என்று பொதுமக்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், 2019 ஜனவரியில் கோயில் வழிபடச் சென்ற மக்களை மலை உச்சியை அணுகவிடாமல் தடுக்கப்பட்டனர். இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் இது தனது ஆழுகையின் கீழ் வரும் ஒரு சொத்து என்று கூறி ஒரு அறிவிப்பை போட்டிருந்தது.

இது குறித்து மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, குச்சவெளி பிரதேச செயலகம் அனுமதி இன்றி கட்டிடம் கட்டுவதற்கு எதிராக தடை விதித்து, தடைக்கான அறிவிப்புகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டன. இதையடுத்து, கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், கடந்த ஒரு வாரமாக, சிங்காபுரவிலிருந்து வந்த சிவில் பாதுகாப்புப் படையின் துணை ராணுவ வீரர்கள் என்று நம்பப்படும் தொழிலாளர்களால் கட்டிடத்தின் கட்டுமானம் கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சைவ கோவிலின் அறங்காவலர் குழுவின் கடிதம்

இதற்கிடையில், அருகிலுள்ள சிங்கபுர மற்றும் அரிசி-மலை குடியேற்ங்களை சேர்ந்த இரண்டு சிங்கள தேரவாத பௌத்த பிக்குகளும் பனிக்கன்-வயல் சந்தியில் ஒரு புத்த விகாரையைத் அமைக்க திட்டமிடுகிறார்கள். கடந்த காலத்தில் தங்கள் கிராமத்தில் பௌத்த கோயில்கள் எதுவும் இல்லை, சிங்கள பௌத்தர்கள் அங்கு வசித்ததுமில்லை என்று தமிழ் மக்கள் தங்கள் கடிதங்களில் தெரிவித்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டில் சிறிலங்க அரசால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலைகளைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் முற்றிலுமாக இடம்பெயர்ந்த முதல் தமிழ் கிராமம் தென்ன-மரவடியாகும். 1984 ஆம் ஆண்டில் இக் கிராமத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட முன்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. 2010 முதல் தமிழ் மக்கள் மீள்குடியேற்றத் தொடங்கியுள்ளனர்.

இனவிரோத திட்டங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் மூன்று உள்ளூர் ஆர்வலர்களான வி.தம்பி அய்யா, எஸ்.கஜேந்திரன் மற்றும் என் சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். வரசித்தி விநாயகர் கோயிலின் அறங்காவலர் குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளன.