சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?

சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது.   

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு திகதி உண்டு.   

அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.   

கடந்த வாரம் சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’ (One Belt One Road) முன்னெடுப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கால் முன்மொழியப்பட்ட இத்திட்டமானது, 152 நாடுகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியதாகும்.   

‘பட்டுப்பாதை பொருளாதாரப் பட்டி’ என்று தொடங்கிய இத்திட்டம், பின்னர் ‘21ஆம் நூற்றாண்டுக்கான பட்டுப்பாதை, பொருளாதாரப் பட்டி’ மற்றும் ‘கடல்வழிப்பட்டுப் பாதை’ ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாரியளவில் விரிவடைந்த இந்த முன்னெடுப்பில், பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது.   

குறிப்பாக, அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய முதலாவது கூட்டம், 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்குபற்றிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கடந்தவாரக் கூட்டத்தில் அதிக நாடுகளும் அதிலும் குறிப்பாக அதிக நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.   

இம்முறை 37 நாடுகளின் அரசதலைவர்கள் பங்குகொண்டுள்ளனர். இது, இம்முனைப்பு கவனம் பெறுவதையும் நாடுகளை ஈர்ப்பதையும் காட்டி நிற்கின்றது.   

இக்கட்டுரை, இந்த முனைப்பு தொடர்பான மூன்று முக்கிய விடயங்களை நோக்குகிறது.   

முதலாவது, மேற்குலகுக்கும் இம்முனைப்புக்கும் இடையிலான உறவு தொடர்பானது.  

இரண்டாவது, சீனாவும் சீனமக்களும் இதை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதாகும்.  

மூன்றாவது, இதன் எதிர்காலம் குறித்ததொரு பார்வையாகும்.   

மேற்குலகு தோற்கும் களம்   

சீனா இம்முனைப்பை அறிவித்தது முதல், இதற்குக் கடுமையான எதிர்ப்பை மேற்குலக நாடுகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இதைக் கடுமையாக எதிர்த்தன.   

இதைப் பாதுகாப்புக்குச் சவாலானதாகவும் நவீன கொலனியாதிக்கமாகவும் வர்ணித்தன. ஆனால், இன்று ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், நிலைமைகள் மாறியுள்ளன. குறிப்பாக, கடந்த ஓராண்டு காலத்தில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் 14 நாடுகள், இதுவரை சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’ முன்னெடுப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக, 11 கிழக்கு ஐரோப்பிய நாடுகள், முதலில் அங்கத்துவம் பெற்றன.   

ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அங்கத்துவம் பெறாத நிலையிலும், அவையே பலமான பொருளாதார நாடுகள் என்ற நிலையிலும், சீனாவுடனான போட்டியைத் தொடர, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கங்கணம் கட்டியுள்ளன.  

இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கிரேக்கம் இந்த முன்னெடுப்பில் இணைந்தது. இதைத் தொடர்ந்து இவ்வாண்டு தொடக்கத்தில், போர்த்துக்கல் இணைந்தது. இந்தமாதம், சீனாவின் முன்னெடுப்பில் இத்தாலி பங்காளியாகியுள்ளது. ஐரோப்பாவின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், ஜீ-7 நாடுகளில் ஒன்றாகவும் இத்தாலி உள்ளது.   

சீனாவின் இந்த முன்னெடுப்பை, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து எதிர்த்து, வீழ்த்துவது என்ற இணைந்த திட்டமிடலில், மிகப்பெரிய சவால் இப்போது ஏற்பட்டுள்ளது. 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், சரி அரைவாசி நாடுகள் ‘ஒருபட்டி ஒருவழி’ முனைப்பில் இணைந்துள்ள நிலையிலும், அண்மையில் சீனா தொடர்பான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.   

‘ஐரோப்பிய ஒன்றியம் – சீனா: தந்திரோபாயமான முன்னோக்கு’ (EU-China: A strategic Outlook) என்று பெயரிடப்பட்ட அறிக்கையானது, சீனாவைப் பொருளாதாரப் போட்டியாளராகவும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பவராகவும் எல்லாவகையிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட எதிரியாகவும் காண்கிறது. இந்தப் பின்புலத்திலேயே, சீனாவின் இந்த முன்னெடுப்பையும் அதற்கான ஐரோப்பிய எதிர்வினையையும் நோக்க வேண்டியுள்ளது.   

சீனாவுக்கு எதிரான, பிரதான எதிர்வினையை, அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. குறிப்பாகச் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமாக ‘ஹூவாவி’க்கு எதிரான போரில், அமெரிக்கா மெதுமெதுவாகத் தோற்று வருகிறது.   

உலகளாவிய ரீதியில், 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியாக ‘ஹூவாவி’ நிறுவனமே திகழ்ந்து வருகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பம் அதன் வசமே உள்ளது. இருந்தபோதும் இந்த 5G தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனா, நாடுகளை உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனால் இத்தொழில்நுட்பத்தை, ‘ஹூவாவி’யிடம் இருந்து வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று, அமெரிக்கா கோரி வருகிறது. ஆனால், இது வெற்றியளிக்கவில்லை.   

அதற்கான காரணங்களில் ஒன்று, குறித்த தொழில்நுட்பம் ‘ஹூவாவி’ நிறுவனத்திடமே உள்ளது. இதற்கான காப்புரிமை ‘ஹூவாவி’க்குரியது. எனவே, இதை அமெரிக்கா பிரதி பண்ண முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பல மேற்குலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.   

அமெரிக்காவின் கோரிக்கையை, அண்மையில் ஜேர்மனி நிராகரித்ததோடு, ‘ஹூவாவி’யுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இது தொழில்நுட்பத்துறையில் சீனாவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதோடு, அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் முன்புபோல் ஆட, ஏனைய மேற்குலக நாடுகள் இப்போது தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.   

இப்பின்னணியில், கடந்த வாரங்களில் நடந்த சில நிகழ்வுகளை நோக்கினால், இதைத் தர்க்க ரீதியாக விளங்கவியலும்.   

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியாவின் முடிவு, நடைமுறைப்படுத்த இயலாமல் இழுபடுகிறது. பிரித்தானிய நாடாளுமன்றம் வேண்டுகிற மாற்றங்களுக்கு விட்டுக்கொடுக்க, ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இல்லை. இதனால் பிரியவும் முடியாமல், சேர்ந்திருக்கவும் முடியாமல் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.   

பிரித்தானியா இப்போது சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’ முன்னெடுப்பில் ஆர்வம் காட்டுகிறது. பிரித்தானியாவின் நிதியமைச்சர் கடந்தவாரக் கூட்டத்தில் பங்குகொண்டார்.   

இவ்வளவு காலமும், சீனாவின் இம்முன்னெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு, கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்திருந்த பிரித்தானியா, இப்போது தலைகீழாக மாறி, தன்னையும் சீனாவின் முன்னெடுப்பில் பங்காளியாக்க முண்டியடிக்கின்றது.   

சீனாவில் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட், தற்காலத்தை ‘சீன-பிரித்தானிய உறவின் பொற்காலம்’ என வர்ணித்தார். உத்தியோகபூர்வமாக இந்தமுன்னெடுப்பில், இன்னும் இணையவில்லையாயினும் பிரித்தானிய நிறுவனங்களை இதில் சேர்த்துக் கொள்ளுமாறு அவர் கோரினார். இந்தக் கூட்டத்தில், பிரித்தானியாவின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சரும் பங்குபற்றினார்.   

சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’த் திட்டத்தில் இணைவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால், ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பிரித்தானியா முனைகிறது.   

பிரித்தானியாவின் இந்தக் கொள்கை மாற்றமும் சீன விஜயமும் நிகழ முதல், இன்னொரு விடயத்தைப் பிரித்தானியா செய்தது. ‘ஹூவாவி’யின் 5G தொழில்நுட்பத்தை, பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க முடிவெடுத்தது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இம்முடிவை பிரித்தானியா எடுத்துள்ளது.   

இப்போது, ‘ஹூவாவி’யை பிரித்தானியாவுக்குள் அனுமதித்தால் பிரித்தானியாவுடனான உளவுத்துறைத் தகவல் பரிமாற்றத்தை நிறுத்துவதாக அமெரிக்கா எச்சரிக்கிறது. ஆனால், பிரித்தானியா அதையும் மீறி, சீனாவுடன் இணைந்து பணியாற்றுகிறது.   

இங்கு கவனிக்கவேண்டியது யாதெனில், சீனாவுக்கு ஒரு நல்லெண்ண சமிக்கையைக் காட்டிவிட்டு, தங்களையும் ‘ஒருபட்டி ஒருவழி’யில் இணைக்குமாறு பிரித்தானியா கோருகிறது. இவை, சீனா – மேற்குலக உறவின் புதிய பரிமாணங்களைக் காட்டி நிற்கின்றன.   

சீன மக்கள் என்ன நினைக்கிறார்கள்?  

இந்த முன்னெடுப்பைச் சீன மக்கள், இரண்டு விதங்களில் நோக்குகிறார்கள். முதலாவது, பொருளாதார ரீதியிலும் தொழிற்றுறையிலும் மிகை வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், அதைத்தக்க வைக்க, புதிய சந்தைகளும் புதிய வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. அந்தச் சந்தைகளையும் வாய்ப்புகளையும் இந்த முன்னெடுப்பு வழங்குகிறது.   

அதேவேளை, சீனாவுக்கும் புற உலகுக்கும் இடையிலான மேம்பட்ட போக்குவரத்துத் தொடர்பால் முறைகள், சிறிய சீன தொழில்முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கின்றன. சீனாவின் மத்திய அரசாங்கத்துக்கும் பிரதேச அரசாங்கங்களுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான பதட்டங்களை, இந்த முன்னெடுப்பு, பல வழிகளில் குறைத்துள்ளது.   

இந்த முன்னெடுப்பில், பிராந்திய வர்த்தகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், சீனாவின் அதிகார அடுக்குகளில், கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களும் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இது ஒரு பொருளாதாரப் பதட்டமின்மையை உருவாக்க வழிசெய்துள்ளது. அதேவேளை, இந்தத் திட்டத்தால் இதுவரை பாரிய பொருளாதார அசமத்துவங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றது.   

மறுபுறம், பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ள நாடுகள் பல, இத்திட்டத்தில் இணைகின்றன. எனவே அவற்றின் பொருளாதாரப் பாரத்தையும் சீனா சுமக்க வேண்டி வரும் என்று அஞ்சுகிறார்கள்.   

இதுவரை, பாரிய பொருளாதார நலன்களை இத்திட்டம் சீனாவுக்கு வழங்காவிட்டாலும் வேலைவாய்ப்பு, வளப்பங்கீடு, புதிய வாய்ப்புகள் என்பவற்றை, இத்திட்டம் வழங்கியுள்ளது என்கிறார்கள் சீனர்கள்.   

எதிர்காலம் குறித்த கேள்விகள்  

கடந்தவாரக் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய சீன ஜனாதிபதி, “இந்த முன்னெடுப்பில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், நான்கு விடயங்களைக் கட்டாயம் கருத்தில் கொள்வதுடன் அதைப் பங்காளிகளும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.   

முதலாவது, திட்டங்கள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும்.  

 இரண்டாவது, திட்டங்களில் ஊழல் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.   

மூன்றாவது, திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்காமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.   

நான்காவது, இதில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் நின்று நிலைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.   

பெற்றுக்கொண்ட அனுபங்களின் அடிப்படையிலேயே, இவற்றைச் சீன ஜனாதிபதி முன்மொழிந்திருக்கிறார்.   

அதேவேளை, இந்த முன்னெடுப்பை ‘சீன மேலாதிக்கத் திட்டம்’ என அழைக்கப்படுவதற்கு மறுப்பாகவும் பங்காளி நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலும் இதை அவர் வலியுறுத்தினார் என விளங்கவியலும்.   

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘அமெரிக்கா முதலில்’ என்ற பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கையில், ஜீ ஜின்பிங் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இன்னோர் உலகமயமாக்கலை முன்மொழிகிறார்.   

இதுவரை அமெரிக்கா எழுதிவைத்திருந்த வர்த்தக விதிகளை, சீனா முழுமையாக மாற்றியமைக்கிறது. ஏற்கெனவே, அமெரிக்க – சீன வர்த்தகப் போர் அடுத்த கட்டத்தை அடைந்த நிலையிலேயே, புதிய நாடுகள் சீனாவின் இம்முனைப்பில் இணைகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் இதில் இணைகின்றன.   சீனாவின் இந்த முன்னெடுப்பு, உலக அரசியல் அரங்கை மாற்றுகிறது. இந்த மாற்றம், புதிய பாதையா அல்லது புதிய ஒழுங்கா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

– தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

நன்றி: தமிழ்மிரர்