பல்கலைக்கழக மாணவ தலைவர்களை விடுவிக்க மேற்குலக தூதுவர்கள் செயற்பட வேண்டும்

பல்கலைக்கழக மாணவ தலைவர்களை விடுவிக்க மேற்குலக தூதுவர்கள் செயற்பட வேண்டும்

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் தமிழ் கிறிஸ்தவர்களே அதிகளவில் பாதிக்கபட்டிருந்தனர் என்பதை மேற்குலக நாடுகளுக்கு நினைவூட்ட வேண்டும்,

ஏனெனில் இனப்படுகொலை யுத்தம் முடிவடைந்த பின்னர் பொதுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தலைவர்களும், வெளிப்படையாகவே அதன் பக்கமே சாய்ந்திருந்தனர்.

அரசியல் ஆய்வாளருமான எஸ்.ஏ.ஜோதிலிங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகளைப் பயன்படுத்தி அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் பேரினவாத முறையில் அவசரகால சட்டத்தை முற்றிலும் அத்துமீறிய வகையில் பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசு இப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்களைக் கட்டுப்படுத்தியுள்ளது என்று யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞரும் அரசியல் ஆய்வாளருமான எஸ்.ஏ.ஜோதிலிங்கம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மாணவர்களை விடுவிப்பது தொடர்பாக செயல்பட முடியாமல் போனதாலும், அவர்களின் விடுதலை அவசரகால விதிகளின் கீழ் சிறிலங்கா சட்டமா அதிபரின் நேரடியான தலையீடு தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்ட அடுத்த நாளில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

எனவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (P.T.A) கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர்களை அவர்களின் ஜனநாயக மற்றும் அமைதியான நீதிக்கான நடவடிக்கைகளுக்காக குற்றவாளியாக்காமல் அவர்களை விடுவிக்குமாறு சிறிலங்கா அரசை கோருவதற்கு மேற்கத்திய நாடுகளுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைத்துவம் சட்டபூர்வமான வழியை நம்பிக்கொண்டு இலங்கை சட்டமா அதிபரிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்திராமல், கொள்கை ரீதியான அரசியலை முன்னுரிமையின் முன்னெடுத்திருக்க வேண்டும் என்று ஜோதிலிங்கம் கூறினார். செயலற்ற அணுகுமுறையை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு “துரோகம்” என்று வகைப்படுத்தினார்.

சிறிலங்கா நீதித்துறையின் பேரினவாத தன்மையை சீர்திருத்தங்கள் மூலம் மாற்ற முடியாது. ஒற்றையாட்சி முறையை உண்மையான கூட்டாட்சி அரசியலமைப்பாக மறுசீரமைக்காமல் நடைமுறை சமன்பாடு மாறாது என்று அரசியல் ஆய்வாளர் கூறினார்.

கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜேவிபி, ரோஹனா விஜேவீராவின் புகைப்படத்தை தனது அரசியலில் பயன்படுத்துவதற்காக எந்த எதிர்ப்பினையும் எதிர்கொள்ளவில்லை என்றாலும், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் படம் தம்வசம் இருந்ததற்காக கூட தமிழர்களை சிறிலங்கா அரசு கடுமையாக தண்டிக்கின்றது.

பிரபாகரனின் புகைப்படம் இருப்பதைக் கூட தமிழ் தேசியப் போராட்டத்தை புதுப்பிப்பதாகக் கருதும் சிறிலங்கா அரசின் அணுகுமுறை, அதன் பேரினவாத தன்மையை அம்பலப்படுத்தியது.

தாயகத்தில் உள்ள அடிமட்ட அமைப்புகள் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி, கொழும்பில் உள்ள இராஜதந்திர பணிகள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாணவ தலைவர்களை விடுவிப்பதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும், என்றார்.

திரு ஜோதிலிங்கமும் இதேபோன்ற அணுகுமுறையை தமிழ் புலம்பெயர்ந்தோரிடமிருந்து வலியுறுத்தினார்.