இராணுவச் சுற்றிவளைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்கள் கைது

இராணுவச் சுற்றிவளைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்கள் கைது

இஸ்லாமிய தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பாதுகாப்பதான ஒரு போலிக்காரணத்தின் கீழ் சிறிலங்கா காவல்துறையினருடன் சேர்ந்து ஒரு பெரியளவிலான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட பின் யாழ் பல்கலைகழக வளாகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம், அங்கிருந்து இரு முன்னணி மாணவத்தலைவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளது. இராணுவம் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, வரும் மே 18 அன்று இடம்பெறவுள்ள தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வை நோக்கி மாணவர்களை அணிதிரட்டப்படுவதை தடுத்து நிறுத்த விரும்புகிறது என்று சக மாணவர் தலைவர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் டி.திவாகர் (25 வயது) மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் (24 வயது)  ஆகிய இரு தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் ஒரு பெரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மாணவர் சங்க அலுவலகத்தில் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் கடந்த காலங்களில் மாணவர்கள் அரங்கேற்றிய நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கி மற்றும் இராணுவ பாணியிலான காலணிகளை கைப்பற்றியிருந்தனர். பின்னர் இவற்றை ‘பயங்கரவாதம்’ தொடர்பான பொருட்கள் என்று கூறத் ஆரம்பித்தனர்.

இராணுவம் கைபற்றிய பொருட்கள்

அத்துடன் நோர்வே அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்திலிருந்து பல ஆண்டுகளாக அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரனின் உருவப்படம் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக இலங்கை இராணுவமும் கூறி வருவதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலிகளை சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்று கூறி தமிழர்களின் மேல் ஒரு பயங்கரவாத முத்திரையை குத்த இராணுவம் முயற்சிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு விடுதியின் தனியார் நடத்துனரான திரு பொன்னம்பலம் ஞானவேலை தடுத்து வைப்பதன் மூலம் இராணுவம் மருத்துவ பீடத்தின் நாளாந்த நடவடிக்கைகளிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உணவு விடுதியின் வளாகத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிரை தியாகம் செய்த முன்னாள் பல்கலைக்கழக மாணவரின் புகைப்படம் புலிகளின் அரசியல் தலைவர் லெப்டினன்ட் கேணல் திலீபனின் உருவப்படம் என்று இலங்கை இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் கூறத் தொடங்கினர்.

கலை பீடத்தின் மாணவர் சங்கம் யாழ்ப்பாண பத்திரிகைக் கழகத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி பத்திரிகையாளர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தியது.

பல்கலைகழக வளாகத்தினுள் இராணுவத்தினர்

இராணுவம் மற்றும் காவல்துறை நீண்ட காலமாக தமிழ் மாணவர் சமூகத்திற்கு எதிராக நிழல் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையை அவர்கள் தங்களை கட்டுப்படுத்த பயன்படுத்துவதாகவும் மாணவத் தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சமூகம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையில் கல்வி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நிலக்கண்ணி வெடிகளின் மாதிரிகளையும் இராணுவ புலனாய்வுப் பிரிவு கேள்விக்குட்படுத்தியது. இருந்த மாதிரிகளில் கிளைமோர் ரக கண்ணிவெடிகளின் கோதுகளும் மற்றும் வேறு வகை கண்ணிவெடிகளும் அடங்கும். கண்ணிவெடிகளின் விளைவுகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக இந்தத் துறை அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. மேலும் அவ்வாறு செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் அது பெற்றிருந்தது. விரிவுரையாளர்கள் தகுந்த ஆவணங்களை காண்பித்த பின்னரும், ‘பயங்கரவாதத்திற்கு’ எதிரான தேடல் நடவடிக்கையின் போதான ‘கண்டுபிடிப்புகள்’ என அவற்றை புகைப்படங்கள் எடுத்து காட்சிப்படுத்துவதில் இராணுவத்தினர் குறியாகவிருந்தனர்.

சிறிலங்கா இராணுவ உளவுத்துறை தமக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்துகிறது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பள்ளிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்கும் மே 06 அன்று பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு முழு ஒத்துளைப்பையும் வழங்குமாறு சிறிலங்கா கல்வி அமைச்சகம் பள்ளிகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவம் நீண்ட காலமாக மாணவர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது. ராஜபக்ஷவின் காலத்து ஆட்சியில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இலங்கை இராணுவத் தளபதிகளை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது, பள்ளிகளில் எந்தவொரு பொதுக் கூட்டமும் அருகிலுள்ள சிறிலங்கா முகாமுக்கு தகவல் தெரிவித்த பின்னரே நடத்தப்பட வேண்டும்.

2015 க்குப் பிறகு, குறிப்பாக வடக்கு மாகாண சபைக்குப் பிறகு, நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் இதில் தலையிட்டார், பள்ளிகளின் சிவில் நிர்வாகத்தில் இலங்கை இராணுவத்திற்கு அறிவிக்கவும் ஈடுபடுத்தவும் தேவையில்லையென என்று பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள், இலங்கை இராணுவம் வடக்கில் உள்ள பள்ளிகளை மீண்டும் இராணுவமயமாக்க வழி வகுத்துள்ளது என்று அதிகாரிகள் புகார் கூறினர்.

பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று நம்புவதாகக் கூறி, வடகிழக்கில் 20 வாகனங்களைக் கண்டுபிடிக்க இலங்கை இராணுவத்திற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையில் ஐந்து இடங்களில் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பல்கலைக்கழக முன்றலில் இராணுவ வாகனங்கள்

இலங்கை இராணுவம் முக்கியமாக பல்கலைக்கழக வளாகம், மருத்துவ பீடம் மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றில் தேடுதல் மேற்கொண்டு வந்தது. சிறிலங்கா காவல்துறைக்கு பதிலாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை இராணுவம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.